நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும்.


அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:


شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ

'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)

'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

மேலும் ரமலான் முதலாவது இரவில் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஹூபுகள் இறக்கப்பட்டன. அதன்பின் 700 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் ஆறாவது நாளில் தௌராத் வேதம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் பிறகு 500 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் 12ல் ஜபூர் வேதம் நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அதன் பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ரமலான் 18ல் இன்ஜீல் வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதன்பின் அறுநூற்று இருபது ஆண்டுகளுக்கு பின் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமும் அருளப்பட்டது.

வான்மறைகள் வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம் தான் இது.

மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும், ரமலான் எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்தியை அடைந்து கொள்வான் என்றும் கூறியுள்ளார்கள்.

ரமலான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல்களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமலான்!

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ ! அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்

நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)

இன்னுமொரு அறிவிப்பில் வருகிறது: ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், 'ஷஃபான் மாதத்தின் இறுதியிலே அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள்,' உங்கள் மீது பரக்கத் செய்யப்பட்ட ஒரு மாதம் நிழலிட்டு இருக்கிறது. இம் மாதத்திலே ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது. இம்மாதத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதைக் கட்டாயக் கடமையாக விதித்துள்ளான். அம் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதை சுன்னத்தாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒருவர் ஒ ருபர்ளை நிறைவேற்றினால் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போலவும், மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவரைப் போன்றும் ஆவார். மேலம் முஃமீன்களின் இரணத்தை விஸ்தீரணமாக்கப்படுகின்ற மாதமாகும். எவனொருவன் நோன்பாளிக்கு நோன்பு திறக்க கொடுக்கின்றானோ அவன் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை பெற்றுக் கொள்கிறான். இது பொறுமையுடைய மாதம் என்று பெருமானார் அவர்கள் கூறிய நேரத்திலே ஸஹாபாக்கள் எல்லாம் 'யாரஸூலல்லாஹ் எங்களில் எவரும் நோன்பு திறக்க கொடுத்த சக்தி பெற்றவராக இல்லையே என்று கேட்க, 'அல்லாஹ் இந்த தவாபை பழத்தாலோ ஒரு முடர் பாலினாலோ அல்லது ஒரு முடர் தண்ணீராலோ நோன்பு திறக்கச் செய்தவர்களுக்கு கொடுக்கின்றான்' என்று கூறினார்கள்.

இன்னுமொரு அறிவிப்பில், எவன் ஒருவன் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறானோ அவனுக்காக மலக்குமார்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் இறைவனிடம் மன்னிப்பு தேடிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மன்னிப்பு தேடுகின்றனர். (ஒரு அறிவிப்பின் படி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லைலத்துல் கத்ர் இரவில் முஸாபஹா செய்கின்றார்கள் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நூல்: முஸ்லிம் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. மற்றொரு நபிமொழி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ரமலான் மாதம் வருகிறது. வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன. எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது. ஷைத்தான்கள் விளங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். நூல்:புகாரி, அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.

ரமலானைக் குறித்து 'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு), திர்மிதி-619
'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

ஹதீது குத்ஸியில் வந்திருக்கிறது, ஆதமின் மக்கள் செய்யும் நோன்பைத் தவிர மற்றெல்லா அமல்களும் அவன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரமாகும். நோன்பு மடட்டும் எனக்குரியது. நான்தான் அதற்கு கூலி கொடுப்பேன் என்றும், (பிறிதொரு இடத்தில்) ஏனெனில் ஆதமின் மகன் எனக்காக அவன் ஊண் குடிப்பு மனோ ,ச்சை ஆகியவைகளை விட்டு விடுகின்றான் என்றும், அல்லாஹ் தனித்து பிரித்து கூறியதற்கு கருத்தாவது நோன்புக்கு நன்மை அதிகமாக இருக்கிறது. மற்ற அமல்களெல்லாம் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகுவதுடன் அதற்கும் மேலாக நன்மைகள் கிடக்கும் என்பதாகும். ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

'ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408

'சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

லைலத்துல் கத்ரு இரவின் மகிமைகள்.

லைலத்துல் கத்ரு இன்ன இரவு என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது ஆண்டில் ஓர் இரவு என்றும், பாரஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவு என்றும் ரமலானுடைய இருத்தி ஏழாம் இரவு என்றும் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் ரமலானில் இருபதுக்குமேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும் கூறப்பட்டிருப்பதால் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களும் பள்ளியில் இஃதிகாப் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதாவது அந்த ஓரிரவு முப்பதினாயிரம் நாட்களைவிட மேலானதாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,

'லைலத்துல் கத்ரு எனும் ஓர் இரவானது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்' என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 97 :3)

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது: ரமலானில் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்பதாம் இரவென்பதாகவும், முதல் பிறை திங்கட்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்றாம் இரவென்பதாகவும், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஏழாம் இரவென்பதாகவும், சனிக்கிழமையாக இருந்தால் இருபத்தி மூன்றாம் இரவு என்பதாகவும், கூறியுள்ளார்கள். 'இந்தக் கணக்குப் படி நான் பருவமடைந்தது முதல் எனக்கு லைலத்துல் கத்ரு தப்பியதே கிடையாது' என்று ஷைகு அபுல்ஹஸன் ஜுர்ஜானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

லைலத்துல் கத்ரு இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவது சுன்னத்:


اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

'யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன், நீ மன்னிப்பை விரும்புகிறாய். ஆகையால், என்னை மன்னித்தருள்வாயாக!'

லைலத்துல் கத்ரு என்று கூறப்பட்டுள்ள 'இன்னா அன்ஜல்னாஹு' என்ற சூராவில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடைவ கூறப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்தியேழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே, இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு இரவு என்று சிலர் கூறியுள்ளனர்.

லைலத்துல் கத்ரு இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்( ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி

லைலத்துல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி,முஸ்லிம்

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்)அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ரு)இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி

'எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!'

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்கள்:புகாரி,முஸ்லிம்

'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்:புகாரி

ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்கள்: புகாரி,முஸ்லிம்

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம் காட்டாத அளவு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா); நூல்:முஸ்லிம்

'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.'

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி,முஸ்லிம்

லைலத்துல் கத்து இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்து விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும்.அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போன்று இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விரவில் தராவீஹ்க்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்த அளவு திக்ரு, கிராஅத், தஸ்பீஹ் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

'ரஸூல் ஸலல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவு லைலத்துல் கத்ரு இரவை விட மிகச் சிறந்ததாகும்' என 'மவாஹிபுல்லதுன்னிய்யா' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய மிக முக்கியமான அமலை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆதார நூல்; இப்னு குஜைமா எண் 191 .

இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் ரமலானை மூன்றாக பிரித்து அந்த மூன்றிலும் மிக முக்கியமான பலன்கள் இருப்பதை சொல்லிக்காட்டுகிறார்கள். அந்த பலன்களை அடைய நாம் செய்யவேண்டியது என்ன?

முதல்பத்தில் இதுவரை நாம் அடைந்த அருட்கொடைக்கு நன்றி கூறுவதும், அல்லாஹ்வின் அருளை வேண்டுவதும்.
நமது நம் முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ் உங்களுக்கு செய்த அருட்கொடை என்ன என்று கேட்டால் செல்வத்தைத்தான் சொல்லிகாட்டுவார்கள். பெரிய பங்களாவை எழுப்பி விட்டு அதன் நெற்றியில் 'இது என் இறைவனின் அருட்கொடை' என்று எழுதியிருப்பார்கள். அப்படியாயின் இதுவரை அவர்கள் வாழ்வில் அனுபவித்த எதுவும் அவர்களுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
  • மாட மாளிகைகளில் வாழ்பவர்களில் பலர் மன நிம்மதியின்றி உறக்கமின்றி தவித்தபோது இவன் குடிசையில் சுகமாக உறங்கினானானே அந்த அருட்கொடை இவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
  • எத்துணையோ பேர் வீடின்றி ரோட்டிலே வாசம் செய்துகொண்டிருந்தபோது இவனுக்கு ஒரு கூட்டை தந்தானே இறைவன்.அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
  • பெட்டி பெட்டியாக பணமும்- கட்டி கட்டியாக தங்கமும் வைத்துள்ள ஒரு செல்வந்தன் ஆங்கில எழுத்தில் உள்ள அத்துணை நோய்களையும் தாங்கி அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது அன்றாடம் காய்ச்சியான இவன் காய்ச்சல் கூட இன்றி இருந்தானே அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
  • அத்துணை வசதிகள் இருந்தும் வெறும் கூழ் மட்டுமே குடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பல செல்வந்தர்கள் இருக்க, சின்ன எலி முதல் பென்னம்பெரிய பிராணியையும் முழுங்கிவிட்டு இருமுறை தரையில் புரண்டுவிட்டு பின்பு சாவகாசமாக ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு போல், சாதாரண கஞ்சி முதல் கனமான ஒட்டக இரைச்சிவரை கிடைத்ததை உள்ளே தள்ளி விட்டு 'ஏவ்' என்று ஏப்பமிட்டு சாதாரணமாக இவன் வாழ்ந்தது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
எது மட்டும் அருட்கொடையாக தெரிகிறது எனில் செல்வம் மட்டுமே அருட்கொடையாக தெரிகிறது. செல்வமும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். ஆனால் அதுமட்டுமே அருட்கொடை என்று எண்ணிவிடக்கூடாது. அல்லாஹ் நமது உடலில் அமைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அருட்கொடைதான். 'நிழலின் அருமை வெயிலில் இருந்தால்தான் தெரியும்' என்பார்கள். அதுபோன்று முழுமையான உடலமைப்பை பெற்ற ஒருவனுக்கு அவனது உறுப்புகளின் மகிமை புரிவதில்லை. நம்முடைய ஒவ்வொரு உறுப்பும் எப்படிப்பட்ட அருட்கொடை என்று புரிய வேண்டுமெனில், மாற்றுத் திறனாளிகளிடம் கேட்டால் தெரியும். கண் இன்றி அவர்கள் படும் கஷ்டங்கள்-செவிப்புலன் இன்றி அவர்கள் படும் துன்பங்கள்- பேசும் புலன் இன்றி அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள்- பிடிக்க கையின்றி, நடக்க கால்களின்றி அவர்கள படும் பாடுகள். இதையெல்லாம் நாம் கவனித்துப்பார்த்தால் அல்லாஹ் நமக்கு எப்படியெல்லாம் தனது அருளை வாரி வழங்கியிருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளலாம். செல்வம் மற்றும் நம் உடலமைப்பு மட்டுமன்றி,
  • ஒரு பெற்றோருக்கு அவர்களின் பெயரை காக்கும் வகையில் ஸாலிஹான குழந்தை கிடைப்பது அல்லாஹ்வின் அருட்கொடை.
  • பிள்ளைகளுக்கு இஸ்லாமிய நன்னெறி போதித்து வளர்க்கும் பெற்றோர் கிடைப்பது அல்லாஹ்வின் அருட்கொடை.
  • ஒரு கணவனுக்கு மார்க்கத்தை கற்ற சிறந்த மனைவி அமைவது அல்லாஹ்வின் அருட்கொடை.
  • ஒரு பெண்ணுக்கு மது-மாது-சூது-புகை-சினிமா உள்ளிட்ட தீமைகளை செய்யாத இறையச்சமுடைய கணவன் அமைவது அல்லாஹ்வின் அருட்கொடை.
  • கடுகளவும் பெருமையின்றி, சுயநலமின்றி சமுதாயத்தின் நலம் காக்கும் ஒரு வழிகாட்டி அமைவதும் அல்லாஹ்வின் அருட்கொடை.
  • முட்டாள்களுக்கு மத்தியில் கற்றவனின் கல்வி அதிலும் குறிப்பாக இஸ்லாமிய கல்வி அல்லாஹ்வின் அருட்கொடை.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் முஸ்லிம்களாக பிறப்பதற்கும், வாழ்வதற்கும் அல்லாஹ் அருள் புரிந்தானே இது மிகப்பெரிய அருட்கொடை. எப்படியெனில், உலகில் உள்ள அத்த்துனை பெரிய கல்விகளையும் கற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியில் வீற்ற போதும் தன்னை படைத்த அந்த பரம்பொருளை அறியும் அந்த பகுத்தறிவில்லா முட்டாள்களாக பலகோடி பேர் இருக்கும் நிலையில், ஏட்டுப்படிப்பை ஊறுகாய் அளவுக்கு கற்ற இந்த முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய இறைவன் யார் என்பதை தெளிவாக விளங்கிவைத்துள்ளதே! கல்லையும்- மண்ணையும்-மரத்தையும்-பாம்பையும்-பல்லியையும் இப்படி மனிதனை விட கீழான படைப்புகளை இறைவனாக கருதி வழிபடும் மக்களுக்கு மத்தியில், இறைவன் யார்? அவன் வல்லமை என்ன? என்பதை விளங்கி அவனை தவிர வேறு எந்த படைப்பினங்களுக்கும் தலைவனங்கமாட்டோம் என்று அறுதியிட்டு உறுதியாக சொல்லும் நெஞ்சுரத்தை தந்தானே வல்ல ரஹ்மான். இதுதான் மிகப்பெரிய அருட்கொடை.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு)இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு
ஆதாரம்;புஹாரி எண் எண் 6412 .
இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் இரு முக்கியமான அருட்கொடை பற்றி கூறுகிறார்கள். ஆரோக்கியம் என்பது ஒரு அருட்கொடை. அந்த ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிவிக்கும், மது-மாது-புகை போன்ற தீய பழக்கவழக்கங்களை விட்டொழிக்கவேண்டும். மேலும், உழைப்பிற்கு ஏற்ப உடம்பிற்கு ஓய்வும் அளிக்கவேண்டும் . ஒய்வு என்ற பெயரில் சினிமா-டிராமா-கிரிக்கெட்-சூதாட்டம் போன்ற தீமைகள் செய்வதையும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
எனவே அன்பானவர்களே! இதுவரை இறைவன் நமக்களித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம். இனியும் அவனது அருள் நிழலில் வாழ இந்த புனித ரமலானின் முதல் பத்தை பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.

நோன்பின் சிறப்புகள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்


நோன்பாளி செய்யக் கூடாதவை
    எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி


    நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்


நோன்பின் தற்காலிக சலுகைகள்
    நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)


     எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்



    அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்


நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
    நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ


    நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது



    நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்


சஹர் செய்தல் 
    நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்


    ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ



    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்


நோன்பு திறப்பது
  அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா


    நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது